June, 2017    
சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
17.07.2015
தலைப்பு : தென்கிழக்கு மற்றும் தூரக்கிழக்கு ஆசியாவில் தமிழ்ச் சுவடுகள்
   

   உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் சார்பில் 17.07.2015 அன்று முற்பகல் தென்கிழக்கு மற்றும் தூரக்கிழக்கு ஆசியாவில் தமிழ்ச் சுவடுகள் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைப்பெற்றது.
 இப்பொழிவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட சென்னையிலுள்ள கொரியக் குடியரசு முதன்மைத் தூதர் திரு. யூம் சூ கிம் (Mr. Kyungsoo Kim, Consul General, Consulate General of Republic of South Korea) அவர்கள் தமிழகத்திற்கும் கொரியாவுக்கும் உள்ள தொடர்புகளைத் தமிழக வரலாற்றுக் காலத்திலிருந்து சுட்டிக்காட்டினார்.
அவர் மாமல்லபுரச் சிற்பங்களைக் கண்டுகொண்டிருந்த போது `அப்பா’ என்று ஒரு சிறுமி பின்னாலிருந்து அழைத்ததைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாராம். அவள் தம்மை அழைக்கவில்லை என்று பின்பு புரிந்துகொண்டாராம். கொரியாவில் தந்தை தாயை அப்பா அம்மா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது என்று உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றினார்.
    தமிழகத்திற்கும் கொரியாவுக்கும் தற்போதுள்ள தொழில்தொடர்புகளும் முதலீடுகளும் பூர்வஜென்ம பலன்கள் எனக்குறிப்பிட்ட கொரியத் தூதர், கொரியாவின் முதல் அரசி இந்தியாவிலிருந்து – அதிலும் தமிழ் நாட்டிலிருந்து சென்றவள் என்று கூறப்படுவதாகக் கூறினார். தமிழ்நாட்டிலிருந்து கொரியாவுக்கு இந்துசமய, புத்தசமயத் தொடர்புகளும் இதிகாச நிகழ்வுகளின் தொடர்புகளும் இருப்பதாகக் கூறினார்.
கொரியத் தூதர் முதன்முதலாகத் தமிழகம் வந்தபோது தம் சொந்த நாட்டில், சொந்த ஊரில் இருப்பதாக உணர்வதாகப் பரவசப்பட்டாராம். தமிழ்ப்பெண்களைப் பார்க்கும் போது கொரியாவில் முற்காலத்துக் கொரியப் பெண்களைப் பார்ப்பது போலவும் அன்றிருந்த தாய்மார்களைப் பார்ப்பது போல உணர்வதாகவும் கூறினார். குறிப்பாக, கொரியப் பெண்கள் தங்கள் திருமணத்தின்போது தமிழ்ப்பெண்கள் தம் நீண்ட கூந்தலை சடைபின்னி முடிந்திருப்பதுபோலவும் கொண்டைபோட்டிருப்பது போலவும் முடிந்திருப்பர் என்றார் அவர்.
கொரியாவும் தமிழ்நாடும் வரலாற்று, பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருப்பதற்கு மேலாகக் கொரிய மொழிக்கும்  தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகளைச் சான்றுகளுடன் திரு. யூ சூ கிம் சுட்டிக்காட்டினார். ஏறத்தாழ நாலாயிரம் கொரியச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் கூறினார். கொரியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பண்பாடு, வரலாறு, மொழி, தொழில் தொடர்புகளைப் பெருக்குவதில் தாம் ஆதரவு காட்டுவதாக அவர் கூறினார்.
இச்சொற்பொழிவின் தொடக்கத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்றுப்பேசினார். மலேசியா புத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பேராசிரியர்  நாகராசன் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையப் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நன்றி கூறினார். ஏராளமான மாணவர்களும் தமிழார்வலர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
படச்செய்தி:. உடன் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையப் பொறுப்பாளர்முனைவர் கு. சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், மலேசியா புத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் நா.கண்ணன், கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பேராசிரியர்  நாகராசன் உள்ளனர்.