November, 2017
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவன நாள்
நிகழ்வு நாள் :
21.10.2017
தலைப்பு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவன நாள்
   

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்ட (21.10.1970) நாளான இன்று (21.10.2017) நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசை, காஞ்சிபுரம் நாட்டியப் பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கிய இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.), முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில் கடந்த ஆறு ஆண்டுகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு எக்காலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்  தமிழ் ஆராய்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளது. மேலும் இவ்வாண்டும் தமிழ் ஆராய்ச்சித் திட்டங்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் பல அரிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. இவ்வாண்டு முதல் உலக மரபு நாள், மொழிபெயர்ப்பு நாள், நூலக நாள், நிறுவன நாள் என்று நான்கு விழாக்களையும் நிறுவனத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணைபிறப்பித்துள்ளது. அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் நிறுவன நாள் விழாவிற்கு வருகை தந்துள்ள மேனாள் இயக்குநர்கள், மேனாள் இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரையும் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

நிறுவன நாளுரையாற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் தம் உரையில் இயல், இசை, நாடகமென முத்தமிழுடன் நிறுவன நாள் கொண்டாடப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். என்னுடன் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த பலரையும் இங்கு காணும் இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இயக்குநரை பாராட்டுகிறேன். நிறுவனத்தில் வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வை மேற்கொள்ளச் செய்யும் வகையில் ஏந்துகளை செய்து தரவேண்டும். அதற்கான முயற்சிகளை இங்குள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டும். பழைய கட்டடத்தில் போதிய இடமின்றி பணியாற்றிய நிலைமாறி இன்று புதிய கட்டடத்தில் பொலிவுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓங்கி உயர்ந்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட கனவுகளை முழுவதுமாய் நிறைவேற்றும் வகையில் இந்நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 நிறுவன மேனாள் இயக்குநர் முனைவர் அன்னிதாமசு அவர்கள் தமது உரையில் தற்போது முழு வளர்ச்சி கண்டுள்ள நிறுவனம் சார்பில்  உலகத் தமிழ் மாநாடு போன்ற மாநாடுகள் நடத்தப்படவேண்டும். இந்நிறுவனத்தில் ஆய்வுக்கான நூலகம், கருத்தரங்கக் கூடம், ஊடக அரங்கு, மொழிப்பயிற்சிக் கூடம், சுவடிகள் பாதுகாப்பு மையம், அயலகத் தமிழர் வரவேற்பு மையம், திருக்குறள் காட்சிக்கூடம் மற்றும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்று சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கி உள்ள இயக்குநர் அவர்களின் பணி போற்றுதலுக்குரியதாகும். மேலும் நிறுவனத்தில் தமிழியல் ஆய்வு இதழ் தொடர்ந்து வெளிவருவது என்பதும் பாராட்டுதலுக்குரியது என்றார்.

முன்னதாக நிறுவனப் பேராசிரியர் பா.இராசா வரவேற்புரையாற்றிட, முனைவர் பெ.செல்வக்குமார் முன்னிலை வகித்தார். முனைவர் ந.தெய்வசுந்தரம், திரு.க.ந.வீரபாகு சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துக்கூறினர். கண்காணிப்பாளர் இரா.இராசா நன்றி கூறினார். இவ்விழாவில் நிறுவன முன்னாள் இயக்குநர்கள், முன்னாள் இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படச்செய்தி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத்தில் மேனாள் இயக்குநர் சிலம்பொலி சு.செல்லப்பனார்,  இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மேனாள் இயக்குநர் அன்னிதாமசு, முனைவர் செ.ஜீன்லாறன்ஸ், முனைவர் ச.சிவகாமி, முனைவர் பெ.செல்வக்குமார். முனைவர் தி.மகாலட்சுமி, திரு.க.ந.வீரபாகு சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.