November, 2018
உலகத் தாய்மொழி நாள்
நிகழ்வு நாள் :
21.02.2018
தலைப்பு : தமிழ்த்தாய் 70 : அம்மாவும் அன்னைத் தமிழும்
   

யுனஸ்கோ நிறுவனத்தால் 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டு, அதற்கிணங்க உலகெங்கிலும் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  அவ்வகையில், உலகின் மூத்த மொழியாகிய நம் தமிழ்மொழியைப் போற்றிடும் வகையில் உலகத் தாய்மொழி நாளான    பிப்ரவரி 21-ஆம் நாளன்று, தமிழ் மொழியின் சிறப்பை இனிவரும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கில் மாண்புமிகு அம்மா அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ‘உலகத் தாய்மொழி நாள்’ பிப்ரவரி 21-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் நடத்திக் கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய்மொழி நாள் தமிழ் வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று இவ்வாண்டும் உலகத் தாய்மொழி நாள் 21.02.2018ஆம் நாளன்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் முற்பகல் தமிழ்நாடு இசைக்கல்லுரி மாணவர்களின் மங்கள இசையுடன் 11.00 மணிக்கு ‘அம்மாவும் அன்னைத் தமிழும்’ என்ற தலைப்பில் முனைவர் பால.இரமணி அவர்கள் தலைமையில் கவியரங்கத்தை வி.ஜி.பி.சந்தோசம் அவர்கள் தொடங்கிவைத்து  நடைபெற்றது.   இதில் கவிஞர் சி.கலைமகள், கவிஞர் பாரதி சுகுமாரன், கலைமாமணி அ.உசேன், கவிஞர் இதயகீதம் இராமானுசம், புலவர் பிரதாபசிம்மன் (எ) பாக்கம் தமிழன், கவிஞர் துரை. இராசமாணிக்கம், கவிஞர் ஈ.விசய், கவிஞர் மு.முனீசுவரன், ஆகியோர் பங்கேற்று கவிபாடினர்.


அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00மணிக்கு கருத்தரங்கத்தை கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டினன் அவர்கள் தொடங்கி வைக்க கவிஞர் வெண்ணிலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  கருத்தரங்கில் புலவர் வெற்றியழகன் ‘இயல் தமிழ்’ எனும் தலைப்பிலும் திருமதி செ.அ.பாகீரதி ‘இசைச்தமிழ்’ எனும் தலைப்பிலும் முனைவர் இரா. குணசேகரன் ‘நாடகத் தமிழ்’ எனும் தலைப்பிலும் முனைவர் க.பசும்பொன் ‘அயலகத் தமிழ்’ எனும் தலைப்பிலும் திரு.கோ.மணி ‘அறிவியல் தமிழ்’ எனும் தலைப்பிலும் திரு.பழ.பாசுகரன் ‘கணினித் தமிழ்’ எனும் தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர்.

பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் தலைமை உரையாற்றியும், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் அவர்கள் விழாப் பேருரையாற்றினார்.  மேலும் திரு.நாகைமுகுந்தன் அவர்கள் கருத்துரையாற்றவும் முனைவர் க.பாசுகரன், பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் வளர்ச்சி நிருவாகத் துணை இயக்குநர் திரு.ம.சி. தியாகராசன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.