May, 2018
தமிழத்தாய் 70 : பெருவிழாவின் நிறைவு விழா
நிகழ்வு நாள் :
01.03.2018
தலைப்பு : தமிழத்தாய் 70 : பெருவிழாவின் நிறைவு விழா
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாண்புமிகு அம்மா அவர்களின் 65, 66, 67, 68, 69ஆம் பிறந்தநாள் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்த்தாய் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் மாதத்தில் ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆய்வரங்குகள், சிறப்புச் சொற்பொழிவுகள், மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், அறக்கட்டளைப் பொழிவுகள், அரிய நூல்கள் வெளியீடு, பயன்தரும் மரங்கள் நடுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் 29.01.2018 முதல் 01.03.2018 வரை மாண்புமிகு அம்மா அவர்களின் 70ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 42 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (ம) சிறப்புச் சொற்பொழிவு, 70 நூல்கள் வெளியீடு, 70 அரிய நூல்கள் வெளியீடு, 70 அரிய வகை மூலிகைச்செடிகள் நடுதல், மூன்று பயிலரங்குகள், 70 கவிஞர்களின் கவியரங்கம், 70 மாணவர்களின் திருக்குறள் முற்றோதல் ஆகியன நடத்தப்பட்டன.

இன்று (01.03.2018) பிற்பகல் 3.00 மணிக்கு தமிழத்தாய்-70 பெருவிழாவின் நிறைவு விழாவும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நிதியுதவியுடன், பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழாவும் நடைபெற்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புல இணைப்பேராசிரியரும் இருக்கையின் பொறுப்பாளர்களில் ஒருவருமான முனைவர் கோ.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றிட, நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் முன்னிலை வகித்திட, பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வு இருக்கையின் தொடக்கமாக பாரதிதாசன் இயல்: காலத்தின் தேவை என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருதாளர் திரு. க.ஜீவபாரதி சொற்பொழிவாற்றினார். தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்கக இயக்குநர் முனைவர் கோ.செழியன் வாழ்த்துரை வழங்கிட, பட்டிமன்ற மாமணி திருமதி உமையாள் முத்து நிறைவு விழாச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நிறுவன ஆய்வு மாணவர்கள், கல்வி அலுவலர்கள், நிருவாகப் பணியாளர்கள் மற்றும் தமிழார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.