July, 2018
தமிழர் சிற்பங்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிகழ்வு நாள் :
13.04.2018
தலைப்பு : தமிழர் சிற்பங்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
   

தமிழர் சிற்பங்கள் எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  இன்று ( 13.04.2018) நடைபெற்றது.  இக்கருத்தரங்கினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம், சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா, கற்க அறக்கட்டளை, சிங்கப்பூர், கானல் வரி கலை இலக்கிய இயக்கம், விருதாசலம், ஆகிய அமைப்புகள் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமை வகித்தார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரத்தின புகழேந்தி அவர்கள் கருத்தரங்க நோக்கவுரை ஆற்றினார். திரு. கி. தனவேல் இ.ஆ.ப., மேனாள் அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு, அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் சிற்பக்கலையினை வரலாற்று காலங்களில் மன்னர்களும் சிற்பிகளும் போற்றி வளர்த்தனர். குறிப்பாக பல்லவர்கள் காலத்திலும் , இராஜராஜ சோழன் காலத்திலும், விஜயநகர பேரரசர்கள் காலத்திலும் சிற்பக்கலைகள் நல்ல வளர்ச்சிப் பெற்றன. உதரணமாக, தஞ்சை பெரியகோவில், மாமல்லபுர கற்சிற்பங்கள், காஞ்சி வரதராசப் பெருமாள் கோவில் ஆகியவற்றைக்கூறலாம். வரதராசப் பெருமாள் கோவிலிலுள்ள யாழி சிற்பங்கள், துவாரபாலகர்கள் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.  தன்னிறைவுப் பெற்ற சமுதாயம்தான்  சிற்பக்கலையினை வளர்த்தெடுக்கமுடியும். சிற்பங்கள் கோவில்களில் இந்து சமயம் பண்பாடு சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டன எனக் கூறினார்.  


தமிழர் சிற்பங்கள்’ நூலினை வெளியிட்டு தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறு.இராமநாதன் அவர்கள் பேசுகையில்  தமிழரின் பண்பாடு, வழிபாட்டுமுறைகள், சடங்குகள்  ஆகியவையே சிற்பக்கலைகளுக்கு அடிப்படையாக அமைந்தன எனக் கூறினார். கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் பேசுகையில்  உலகிற்கு கற்களை செதுக்கும் உளியினை முதன்முதலில் தந்தவன் தமிழன்தான். தமிழர் சிற்பங்கள் ஆசியா கண்டம் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றது.  கம்போடியா  நாட்டில் அங்கோர்வாட் ஆலயம் பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல்களால் கட்டப்பட்டது எனக் குறிப்பிட்டார். ’தமிழர் சிற்பங்கள்’ நூலினை பேரா. ஆறு. இராமநாதன் அவர்கள் வெளியிட  திரு. கி. தனவேல் அவர்கள் பெற்றுகொண்டார்.
 

சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி, கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ப. சாந்தி, நிறுவனப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறுவனத்தின் சார்பில் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைப்புச் செய்த அயல்நாட்டுத் தமிழர் புலம்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் வரவேற்று பேசினார். கானவரி இயக்கத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் முனைவர் இரா. மோகனா அவர்கள் நன்றியுரை நல்கினார்.
 

தமிழ்நாட்டின் சிறந்த சிற்பக்கலைஞர்களான ஓவியர் வை. தட்சிணா மூர்த்தி, மரச்சிற்பக்கலைஞர் போ. இராஜாராம் ஆச்சாரி திருவாதிகை  ஆகியோருக்கு கானவரி கலை இலக்கிய இயக்கம் மற்றும் கற்க அறக்கட்டளை சார்பில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் மலேசிய மாணவர்கள், உலகத் தமிழாராய்ச்சி மாணவர்கள், கருத்தரங்கப் பேராளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கினைச் சிறப்பித்தனர்.