September, 2018
மலேசியத் தமிழாய்வு மாணவர்களுக்குத் தமிழ்மொழி – இலக்கியம் கற்றல் கற்பித்தல் திறன்கள் மேம்பாடு பயிற்சிப் பட்டறை
நிகழ்வு நாள் :
21.04.2018
தலைப்பு : மலேசியத் தமிழாய்வு மாணவர்களுக்குத் தமிழ்மொழி – இலக்கியம் கற்றல் கற்பித்தல் திறன்கள் மேம்பாடு பயிற்சிப் பட்டறை
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் தமிழாய்வு மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் மலேசியாவின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வு மாணவர்களுக்குத் தமிழ் – மொழி இலக்கியம் கற்றல் கற்பித்தல் பயிற்சிப் பட்டறை 08.04.2018  முதல் 21.04.2018 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.


தொடக்க விழா:

இப்பயிற்சிப் பட்டறையின் தொடக்கவிழா 09.04.2018  அன்று முற்பகல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கா. பாண்டியராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்  பரிமாற்றத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும். மேலும், கல்விசார் புதிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும். மலேசிய மாணவர்கள் தாய்த் தமிழகத்தில் இருக்கும் கலை, இலக்கிய பண்பாட்டுக் கூறுகளையும் சிற்பக்கலைகளையும் காணும்போது  தமிழரின் பாரம்பரியத்தை முழுமையாகப் புரிந்துக்கொள்ளமுடியும் என்று கூறினார்.  அடுத்ததாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்கள் பேசுகையில் தமிழ் மொழி இன்று அரசுப் பள்ளிகள் மூலமாகத்தான் வளர்க்கப்படுகின்றது என்று கூறினார். மலேசியத் தமிழ்க் கல்வி வரலாறு எனும் நூலினை அமைச்சர் அவர்கள் வெளியிட துணை வேந்தர் அவர்கள் பெற்றுக்கொண்டார். மலேசியாவின் சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி அவர்கள் மலேசியத் தமிழ்க் கல்வி வரலாறு குறித்துப் பேசினார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன், மற்றும்  தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர் ந. அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அயல்நாட்டுத் தமிழர் புலம் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நிகழ்ச்சியில் வரவேற்று பயிலரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் து. ஜானகி அவர்கள் நன்றியுரை கூறினார்.

இப்பயிற்சிப் பட்டறை 1.வகுப்பறைப் பயிற்சி 2. கள ஆய்வு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 1. தமிழ்மொழி – இலக்கியம் சார்ந்து வகுப்பறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. 2. மலேசியத் தமிழாய்வு  மாணவர்கள் தாய்த்தமிழகத்தை முழுமையாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு சென்னை , வேலூர், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி ஆகிய நகரங்களின் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மலேசிய மாணவர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் தமிழர் சிற்பங்கள் குறித்து கானல்வரி கலை இலக்கிய இயக்கம் 13.04.2018  அன்று ஒருநாள் பயிற்சியினை அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

நிறைவு விழா:
 

இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி ஜெயக்குமார் அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சிப் பெற்ற மலேசிய மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.அவர்தம் உரையில் தமிழாய்வு மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின்மூலம் அயல்நாட்டு மாணவர்கள் தாய்த்தமிழகம் வருகைத் தந்து அவர்களின் தாய்ப் பண்பாட்டையும், தமிழ்க்கலை, இலக்கியத்தையும் நேரில் கண்டு அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.மேலும், இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசின் சார்பில் நிதியுதவி உயர்த்தி அளிக்கப்படும் என்று கூறினார். இவ்விழாவில் மலேசிய நாட்டுத் தூதர் சரவணன் கார்த்திகேயன், சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் புல முதன்மையர் பேரா. முனைவர் மாஜான் பின் அர்சாத், திருமதி சைத பிந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டனர். மேலும், சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி , நிறுவனத்தின் தமிழ்மொழி (ம) மொழியியல் புலத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர்புலத்தின் உதவிப் பேராசிரியர் து. ஜானகி அவர்கள் வரவேற்று பேசினார். இந்த  நிகழ்ச்சியின் இறுதியாக தமிழாய்வு மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்,  நிறுவனத்தின் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம் – அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலமாக கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.