April, 2019
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்
நிகழ்வு நாள் :
05.10.2013
தலைப்பு : தமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் 1891 - 1910
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை  அறக்கட்டளைச் சொற்பொழிவு 05.10.2013 அன்று நடைபெற்றது. இச்சொற்பொழிவிற்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்ஸ், பொருளாதாரவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜெ.பி.பி. மொரே அவர்கள் தருமநாதனிலிருந்து வ.உ.சிதம்பரம் வரை தமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 
 
அவர்தம் உரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை வெகுவாகப் பாராட்டியதுடன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 3.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதையும், திருக்குறள் ஓவியக்கூடம் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு மையம், மதுரையில் மீண்டும் உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ்த்தாய் சிலை அமைக்க ரு. 100.00 கோடி, தாய்மொழி நாள் கொண்டாட்டம், தமிழில் தெருக்களின் பெயர்கள், மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை என அறிவிப்பு, கபிலர் விருது, உ.வே.சா. விருது, ஔவையார் விருது, ஜி.யூ.போப் விருது, உமறுப்புலவர் விருது, தமிழ்த்தாய் விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது என இரண்டாண்டுகளில் மட்டும் 9 விருதுகளை அறிவித்துத் தமிழ்ச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தியவர்கள் இதுவரை யாருமில்லை என்கிற அளவிற்குத் தமிழ் வளர்ச்சியில் சாதனை படைத்தவர் என்று உலக நாட்டு மக்களெல்லாம் வியந்து நன்றியோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பணியைப் பாராட்டி மகிழ்கின்றனர். பிரான்சு நாட்டிலுள்ள தமிழர்களும் அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றனர் என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் பெருமிதம் அடைகிறேன் என்றார்.
 
1891 முதல் 1910ஆம் ஆண்டு வரை அதாவது தருமநாதனில் இருந்து வ.உ. சிதம்பரம் பிள்ளை வரையில் தமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் குறித்தும்,  இந்திய சுதேசிக் கம்பெனிகளின் நீராவிக் கப்பல் வர்த்தகங்கள் ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்பதையும் சான்றுகளுடன் எடுத்துக்கூறினார்.  
 
நீராவிக்கப்பல் சரித்திரம் தமிழகத்தில்  மிகவும் தொன்மையானது என்றும், இட்லி, கொழுக்கட்டை போன்றவற்றை நீராவியால் வேகவைக்கும் தொழில் நுணுக்கத்தைத் தமிழக மக்கள் பழங்காலத்தே அறிந்து வைத்திருந்தனர் என்றும் குறிப்பிட்டார். 18ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டபோது நீராவியால் கப்பல், இரயில் போன்றவற்றை இயக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பல நீராவிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டன என்றும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் இவை ஒழிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு 1905ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை சுமார் 30 நீராவிக் கப்பல் கம்பெனிகள் இவ்வாறு ஒழிக்கப்பட்டன என்றும் இவர் தமது பொழிவில் குறிப்பிட்டார்.
 
சொற்பொழிவு நிகழ்த்திய ஜெ.பி.பி. மொரே அவர்கள் புகழ்பெற்ற பாரீஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சமூகவியலுக்கான பிரான்சு உயர்கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
 
புதுச்சேரி வளர்த்த பாரதியார், இந்திய நீராவிக்கப்பல் வர்த்தகம், தென்னிந்திய இசுலாமியர்கள் மற்றும் திராவிடர்கள் ஓர் ஆய்வு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் புலமையுடையவர். தற்போது இவர் பாரீசுலுள்ள பொருளாதாரவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 
 
முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் அனைவரையும் வரவேற்று நிறுவனத்தின் சார்பாகச் சிறப்புச் செய்தார். இறுதியாக, அறக்கட்டளைப் பொழிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் நன்றி கூற விழா சிறப்புடன் முடிந்தது.