March, 2019
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் பெருவிழா
நிகழ்வு நாள் :
31.01.2014
தலைப்பு : புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66ஆவது பிறந்தநாள் தொடக்க விழா
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 66வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2014 பிப்ரவரி திங்கள் முழுவதும்  அதாவது 31.01.2014 முதல் 28.02.2014 வரை நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருமாதம் முழுவதும் நடைபெறும் இவ்விழாவின் தொடக்கவிழா இன்று ( 31.01.2014 ) நடைபெற்றது.
 
இவ்விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டதாவது: 
 
தமிழ்மொழியின் பெருமை உலகமெங்கும் பரவிடவும், தமிழ்மொழி வளர்ச்சி பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருபவர் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். எட்டாவது உலகத் தமிழ்மாநாடு கண்டவர் நமது முதலமைச்சர். தமிழ் வளர்ச்சித் துறைக்கென்று  முதன் முதலாக குடியரசு நாள் விழாவில் அலங்கார ஊர்தி வர ஆணையிட்டவர். உலகத் தமிழ்ச் சங்கம் மதுரைக்கு 25 கோடியில் பெருந்திட்ட வளாகம் கட்ட நிதி ஒதுக்கியவர்.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் இருக்கை, திருக்குறள் காட்சிக்கூடம், தமிழ்ப்பண்பாட்டு மையம் ஏற்படுத்தியவர்.  தமிழ் அறிஞர்களின் பெயரால் பல விருதுகளை உருவாக்கியவர். பெண்கள் நலம் காப்பவர்.  மாற்றுத் திறனாளிகளின் நலம் பேணுபவர். மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கி கல்விப் புரட்சி ஏற்படுத்தியவர். மகத்தான திட்டமான மழைநீர்ச் சேகரிப்பு திட்டம் தந்தவர். தீராத பிச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர். மீனவர் நலம் போற்றுபவர், காவிரி நதி நீர் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தவர். அம்மா உணவகம், அம்மா குடிநீர்த்திட்டம் போன்ற திட்டங்களை தந்தவர்.  திருவள்ளுவர் கூறும் மதி நுட்பம் வாய்ந்தவர். பிற மாநிலங்களில் இல்லாத 150 திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறவர் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயல்வேகத்திற்கு ஈடுகொடுத்து அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ.இராசாராம், இ.ஆ.ப. அவர்கள் குறிப்பிட்டார். 
 
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு. கே. சி. வீரமணி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் நட்டு   விழாப் பேருரை நிகழ்த்தினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது விழா பேருரையில் குறிப்பிட்டதாவது:
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரித் திங்கள் முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் விழாவின் முதல்நாளில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் வளர்ச்சிக்கென பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு நுழைவுவாயில் கட்ட மாண்புமிகு அம்மா அவர்கள் ரூ. 25.00 இலட்சம் நிதி உதவி செய்தார்கள். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் 3 தமிழ் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கித் தந்தார்கள். ஜி.யூ. போப், உமறுப் புலவர், கம்பர், கபிலர், உ.வே.சா., சொல்லின்செல்வர் ஆகிய விருதுகளை ஏற்படுத்தினார்கள். உலகின் தலையாய அறநெறி நூலாக விளங்கும் திருக்குறளை சீன மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்க்கச் செய்து திருக்குறளின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றினார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் ஆய்விருக்கை, திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம், உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஆகியவற்றை ஏற்படுத்தியதுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கென ரூ. 4.17 கோடி செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்ட ஆணையிட்டு மாண்புமிகு அம்மா அவர்கள் தங்களது திருக்கரங்களால் அடிக்கல் நாட்டினார்கள். 
 
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் பல அரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருபவர் மாண்புமிகு அம்மா அவர்கள். கல்வி உயர்ந்தால்தான் நாடு உயரும் என்று கல்வி வளர்ச்சிக்காக சிறப்பான திட்டங்களை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். பெண் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சிறப்புத் திட்டங்களைத் தீட்டி மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆட்சியில் இதுவரை இல்லாத தனிப்பெருமையை தமிழ்மொழி பெற்றுவருகிறது. இதுவரை இல்லாத வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்றுவருகிறது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
 
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க. பசும் பொன், இலங்கைக் கண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் எழுத்தாளர் திரு. அந்தனி ஜீவா, இலங்கை எழுத்தாளர் திரு. துரைசிங்கம், தமிழ்த் தாய் அறக்கட்டளைச் சிறப்புத் தலைவர் கவிஞர் துறை ராசமாணிக்கம், தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் கவிஞர் த. உடையார் கோயில் குணா மற்றும் ஆசிரியை திருமதி. மு. கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா முன்னிலையுரையாற்றினார்.
 
முன்னதாக  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதுடன் நிறுவனத்தின் செயல்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். நிறுவனத்தின் தனி அலுவலர் தா. மார்ட்டின் செல்லதுரை அவர்கள் நன்றி கூறினார்.
 
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி திங்கள் முழுவதும் நடைபெறவுள்ள விழாவில் 28 ஆய்வரங்கங்கள், 38 நூல் வெளியீடுகள், 66 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், 66 மாணவர்கள் கலந்துகொள்ளும் குறள் முற்றோதல், 66 பலன் தரும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் 100 கலைஞர்களின் கலை நிகழ்வுகள் ஆகியன நடைபெறவுள்ளன.