June, 2017    
66 மாணவ மாணவிகள் பங்கேற்ற திருக்குறள் முற்றோதல்
நிகழ்வு நாள் :
23.02.2014
தலைப்பு : 66 மாணவ மாணவிகள் பங்கேற்ற திருக்குறள் முற்றோதல்
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 66வது பிறந்தநாள் பெருவிழா பிப்ரவரித் திங்கள் முழுவதும் 28 ஆய்வரங்கங்கள், 38 நூல் வெளியீடுகள், 106 கவிஞர்களின் கவியரங்கம், 66 மாணவர்களின் குறள் முற்றோதல் மற்றும் 100 கலைஞர்களின் கலைநிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொன்றும் காலவரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
அவ்வரிசையில் 23.02.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூட முகப்பில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 66 பள்ளி/கல்லூரி மாணவர்கள் பங்கேற்று 1330 குறட்பாக்களை முற்றும் ஓதும் 3 மணிநேரம் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடப் பொறுப்பாளர் முனைவர் து. ஜானகி, உதவிப் பேராசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்திரு. வி.ஜி. சந்தோஷம், தலைவர், வி.ஜி.பி குழுமம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.  தமிழ்நாடு அரசு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் முனைவர் கரு. நாகராசன்  அவர்கள் சிறப்புரை வழங்கினார். பட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் திரு. எஸ்.டி.எஸ். செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநீதி எம். மாதவன், கவிஞர் இராசராசன், முனைவர் ந. அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இத் திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் கலந்து கொண்ட 66 பள்ளி/கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கண்காணிப்பாளர் திரு. இரா. இராசா அவர்கள் நன்றியுரை கூற திருக்குறள் முற்றோதல் விழா இனிதே நிறைவடைந்தது.