March, 2017    
பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிகழ்வு நாள் :
31.05.2014
தலைப்பு : புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்
   

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்' என்ற பொருண்மையிலான கருத்தரங்கு, சிங்கப்பூரில் காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய திருவள்ளூவர்  மண்டபத்தில் 2014 மே திங்கள் 31 ஆம் நாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

      சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, லண்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக பேராசிரியர் சுப.திண்ணப்பன் கருத்தரங்குத் தொடக்க விழாவிற்குத் தலைமை ஏற்றார். குத்து விளக்கேற்றிடத் தொடர்ந்து பானுப்பிரியா, ரூபிணி ஜெயசீலன், கற்பனா சிவன் ஆகியோரின் நாட்டியத்துடன் துவங்கிய இவ்விழாவில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

           தமிழ் இலக்கியக் களத் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நோக்கவுரையாற்றினார். இக்கருத்தரஙக கட்டுரைகளின் தொகுப்பினை தினகரன் வெளியிட முதல் பிரதியை வளர் தமிழ் இயக்கத் தலைவர் இரா.ராஜாராம் பெற்றுக் கொண்டார். ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் வை.தேவராஜா, கவிமாலை அமைப்பின் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர்  முனைவர்.கு.சிதம்பரம், இரா.ராஜாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் பெரி.சிவக்குமார் வரவேற்புரையாற்ற, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.எழில்வசந்தன் நன்றி நவில முற்பகல் நிகழ்வு நிறைவு பெற்றது.

         முனைவர் சீதா லட்சுமி தலைமையில் முதல் அமர்வும், வளர்தமிழ் இயக்கச் செயலாளர் புஷ்பலதா நாயுடு தலைமையில் இரண்டாவது அமர்வும், சிங்கப்பூர் மூத்த படைப்பாளர் கண்ண பிரான் தலைமையில் 3வது அமர்வும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த முனைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் யோகராசா உள்ளிட்டோர் கலந்து கொண்ட 4வது அமர்வு முனைவர் இலலிதா சுந்தரம் அவர்கள் தலைமியில் நடைபெற்றது.. சிங்கப்பூர் மூத்த பத்திரிக்கையாளர் வெ.புருஷோத்தமன் நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றார். வளர் தமிழ் இயக்கப் பொருளாளர் ஜோதி மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுத் துறைத் தலைவர் பேராசிரியர் ஆ.ரா.சிவக்குமார் நிறைவு விழாப் பேருரை நிகழ்த்தினார். முனைவர் முரசு நெடுமாறன் (மலேசியா), பேராசிரியர் யோகராசா(இலங்கை), முனைவர் சற்குணவதி(சென்னை) ஆகியோர் கருத்தரங்க மதிப்புரை வழங்கினர். கவிஞர் அரங்க ராமசாமியின் நன்றியுரையோடு கருத்தரங்கு நிறைவு பெற்றது.