October, 2017    
மொழியியல் புலம் கூட்ட நிகழ்வு அறிக்கை
நிகழ்வு நாள் :
27.06.2014
தலைப்பு : கூட்ட நிகழ்வு அறிக்கை
   
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் மொழி(ம) மொழியியல் புலத்தின்வழித் தாய்மொழியாகக் கொண்டிராத இந்தியர்களுக்கும் அயல் நாட்டினருக்கும் தமிழ்மொழியினைக் கற்பிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் பாடநூல் மற்றும் பயிற்சி நூல்களை மேம்படுத்திடவும், பாடப் பொருண்மைகளை மறு சீரமைப்பதற்கும் ஏதுவாக உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனத்தில் 27.06.2014 அன்று முற்பகல் 12 மணி அளவில் பணித்திட்ட முன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  
 
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குந முனைவர் கோ. விசயராகவன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மொழியியல் பேராசிரியர் பொன். கோதண்டராமன் தலைமையேற்கவும், பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், பேராசிரியர் ஜீன் லாரன்ஸ், பேராசிரியர் அ. கோபால், பேராசிரியர் ஆ. தசரதன், மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர். பெ. செல்வக்குமார், உதவிப் பேராசிரியர்கள் முனைவர் க. சுசீலா மற்றும் முனைவர் நா. சுலோசனா ஆகியோர் மொழியியல் வளமையர்களாகவும், தனி அலுவலர் திரு மார்டின் செல்லதுரை, நிறுவனத்தின் கண்காணிப்பாளர் திரு இரா. இராஜா ஆகியோர் உறுப்பினர்களாகவும் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்மொழிப் பட்டயவகுப்பில் பயின்றுவரும் திரு பீட்டர், சரஸ்வதி, ரியு வோன்சுன் ஆகிய அயல் நாட்டு மாணவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
 
கூட்டத்தில் முன் வைத்த  பொருண்மைகளும் எட்டிய முடிவுகளும்
  • பாடம் மற்றும் பயிற்சிப்பொருண்மைகளை உள்ளடக்கிய  ஒட்டுமொத்த வடிவமாக ஒருமைத் தன்மையுடைய (Homogeneity) ஒரு நூல் அமைப்பினை வெளிக்கொணர்வதன் தேவை கருதப்பட்டது.
  • நடைமுறையில் பயன்படுத்திவரும் பாட நூல்களை நோக்கீடு செய்து அதில் ஏற்பு நிலையில் உள்ள பாடக் குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கான  தளத்தை அமைப்பதற்கு வழிமுறை மொழியப்பட்டது
  • இலக்கண வழிகாட்டி, மற்றும் பேச்சுத்தமிழ், எழுத்துத் தமிழ் ஆகியனவற்றிற்கான அகராதி தயாரிப்பதன் தேவை உணரப்பட்டது.
  • தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை Pan Indian Culture என்பன விடுத்து தமிழினத்தின் தனித் தன்மைப் பண்பாட்டினையும், தமிழ்மொழி வரலாற்றையும், பாரம்பரியக் கலாச்சாரத்தைப்பற்றியும் சுருக்கமாக அளவறிந்து கொடுப்பது பற்றியும் உணரப்பட்டது.
  • மொழி பயிற்று முறை, பயிற்சி முறை ஆகியவற்றை மறு சீரமைப்பதைப்பதன் தேவையும் உணரப்பட்டது.