August, 2017    
மலேசியத் தமிழரும் தமிழும்
நிகழ்வு நாள் :
04.07.2014
தலைப்பு : மலேசியத் தமிழரும் தமிழும்
   
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 23.12.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. இம்மையம் புலம்பெயர்ந்தத் தமிழர்கள் குறித்தத் தகவல்களைத் திரட்டுதல் அயலகத் தமிழறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்துதல், அயல்நாடுகளில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் நடத்துதல் எனப் பல நோக்கங்களாக கொண்டது.
 
இம்மையத்தில் சார்பில் 2013 ஆம் ஆண்டு இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்துடன் இணைந்து உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினை இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தியது. 2014ஆம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் தளத்துடன் இணைந்து புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும் எனும் தலைப்பில் சிங்கப்பூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தியது. மேலும், இம்மையத்தின் சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இதுவரை இரண்டு சிறப்புச் சொற்பொழிவுகளை நடத்தியுள்ளது.
 
இச்சிறப்புச் சொற்பொழிவு வரிசையில் மூன்றாவது பொழிவினை மலேசிய நாட்டின் புத்ரா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியரும் மிகச் சிறந்த தமிழறிஞருமான முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் மலேசியத் தமிழரும் தமிழும் எனும் தலைப்பில் பொழிவினை (04.07.2014) நிகழ்த்தினார். அவர் தமது பொழிவில் மலேசியத் தமிழர் வரலாறு, மலேசியாவில் தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை, மலேசியாவில் தமிழர்களுக்கு இன்று நிலவி வருகின்ற இடர்பாடுகள் குறித்து பேசினார். மேலும் உலக அளவில் இன்று 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை குறித்தத் தகவல்களை ஒன்று திரட்டி உலகத் தமிழர் வரலாற்றைத் தொகுக்கும் பணியினை உலகத்  தமிழாராய்ச்சி நிறுவனம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.
 
தமிழ், தமிழர் என்ற தொடர் மிகவும் ஆழமான கருத்தினைக் கொண்ட தொடர். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல்வேறுப் பணிகளைச் செய்துவருகிறார். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தினை அமைத்துத் தந்த அம்மா அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
இச்சொற்பொழிவுக்கு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையுரையினையும், முன்பாக அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் மூத்த பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி அவர்கள் வரவேற்புரையும், அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப்பேராசிரியர் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் நன்றியுரை நல்க இச்சொற்பொழிவு இனிதே நிறைவடைந்தது.