May, 2017    
சிறப்புச்சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
14.08.2014
தலைப்பு : சிறப்புச்சொற்பொழிவு
   

போருக்குப்பின் இலங்கைத் தமிழரின் சமூகநிலைப்பாடுகள் எனும் பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு வியாழன் அன்று ( 14.08.2014) முற்பகல் 11.30 க்கு நடைபெற்றது. இப்பொழிவினை இலங்கை யாழ்ப்பாணம் ஆகோள் ஆய்வு மையத்தின் ஆய்வறிஞர் முனைவர் ஜெ.அரங்கராஜ் அவர்கள் நிகழ்த்தினார்.

            அவர் தமது பொழிவில் இலங்கைப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய தமிழ்இன அழிப்பினையும் போருக்குப்பின் தமிழர்கள் எதிர்கொள்கின்ற சமூகநிலைபாடுகளையும் தமது ஆய்வுரையில் எடுத்துரைத்தார். போருக்குப்பின் இலங்கை அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவந்துள்ளது . இதனால், தமிழர்கள் எப்போதும் இராணுவத்தின் கண்காணிப்பில் வாழ வேண்டிய சூழல் இருந்துவருகின்றது. தமிழர் தங்கள் குடும்பநிகழ்வுகளான திருமணம், காதுகுத்து போன்றவைகளுக்குகூட இராணுவத்திடம் அனுமதிபெற வேண்டும் என்ற நிலை இருந்துவருகின்றது.

                 இலங்கைப் போரின்போது சுமார் 60 ஆயிரம் தமிழ்ப் பெண்கள்  விதவைகளாயினர். இவ்விதவைப் பெண்கள் இராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள். தனிமையில் இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகின்றது. குடும்பத்தலைவனை இழந்த குடும்பங்கள் பொருளாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவித்துவருகின்றன. இதனைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களைத் தென் இலங்கையில் வேலை தருவதாகக் கொண்டுச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். மேலும் இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களைக் குறிவைத்துத் தமிழர் அடையாளத்தை அழிக்கும் நோக்கோடு கலப்பு இனத்தை உருவாக்க முயற்சித்துவருகின்றது.

         இந்தியாவில் பெண் குழந்தைகளுக்குக் காந்தி என்றோ நேரு என்றோ பெயர் சூட்டமாட்டார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்கள் நேருனி, காந்தினி என்று தமிழ்ப்படுத்தித் தங்கள் பெண்குழந்தைகளுக்கு இந்தியத் தலைவர்களின் பெயர்களைப் பெயர்வைத்து வந்தனர். அதற்கான விசுவாசத்தை இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர்களுக்குக் காட்டிவிட்டது!

         இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீட்டுத்திட்டத்தினால் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வீடுகள் வாழத் தகுதியற்ற இடங்களில் எவ்வித வசதியும் இன்றிக் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் வேண்டுவது வீடு அல்ல  உரிமைகளைத்தான். அதற்கு வழிவகுப்பதை விட்டுவிட்டு இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பது எங்கள் இனத்தின் விடுதலையாகாது.

           நாங்கள் எங்கள் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் தமிழகத்தைத்தான் நம்பி இருக்கின்றோம். மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் செயல்பாடுகள்- அதாவது இலங்கை அரசாங்கத்தின்மீது அம்மா அவர்கள் தமிழகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்த பொருளாதாரத்தடை,சிங்கள இராணுவத்திற்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்கத்தடை, தமிழக மாணவர்களின் போராட்டம் போன்றவை இலங்கைத் தமிழர்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அம்மாவின் பணிகளை இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் மனதாரப் பாராட்டுகிறோம். அம்மாவால்தான் எங்கள் வாழ்க்கையில் விடிவு ஏற்படும் என்று உறுதியாக நம்புகின்றோம் என்று தமது பொழிவில் கூறினார்.

          இச்சிறப்புச் சொற்பொழிவில் நூற்றுக்கும் மேறபட்ட முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பொழிவில் நிறுவன இயக்குநர் பேராசிரியர்  முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன அயல்நாட்டுத் தமிழர்புலத்தின் உதவிப் பேராசிரியர்  மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.