உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரி இணைந்து ‘புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் செவ்வியல் இலக்கியங்களின் தாக்கம்’ எனும் பொருண்மையில் அமைந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் 2013 திசம்பர்த் திங்கள் 9,10, 11 ஆகிய நாட்களில் மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் நடத்தப்பெற்றது. இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. திருமலை அவர்கள் சிறப்புரையும், பெருமாட்டிக் கல்லூரியின் முதல்வர் மெர்சி புஷ்பலதா அவர்கள் தலைமையுரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன் அவர்கள் மையக்கருதுரையும், இலண்டன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் தலைவர் திரு. செல்வ செல்வராசா , சிங்கப்பூர் நன்யெங் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியர் முனைவர் வேல்முருகன், நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர். இக்கருத்தரங்கத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்துக்கொண்டனர்.