October, 2017    
உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
05.12.2014
தலைப்பு : அந்தமான் தமிழர்தம் வரலாறும் வாழ்வியலும்
   

2014 திசம்பர்த் திங்கள் 05ஆம் நாள் அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் அந்தமான் தமிழர்தம் வரலாறும் வாழ்வியலும் எனும் பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. பொழிவினை அந்தமான் மேனாள் கல்வி இணை இயக்குநரும் அந்தமான் தமிழர்ச் சங்க செயலாளருமான முனைவர் மா. அய்யாராஜு அவர்கள் இப் பொழிவினை நிகழ்த்தினார்.

                    அந்தமான் நிக்கோபார்த் தீவுகள் வங்காள விரிகுடாக் கடலில் பரந்து விரிந்து கிடக்கின்றன. இத்தீவுகள் ஒரு பெரும் தீவாக இல்லாமல் பல துண்டுத் தீவுகளாக சிதறிக்கிடக்கின்றன. இத்தீவுக் கூட்டம் சிறிதும் பெரிதுமாகத் தீவுகள், திட்டுகள், குன்றுகள் என 572ஐ எண்ணிக்கையாகக் கொண்டுள்ளது. ஆனால் எல்லாத் தீவுகளிலும் மக்கள் குடியேறி வாழவில்லை. 38 தீவுகளில் மட்டுமே குடியமர்வு அமைந்துள்ளது. இத்தீவுகள் யாவும் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

     அந்தமானில் பழங்குடி மக்களைத் தவிர பிற மக்களை இந்திய விடுதலைக்கு முன்பு குடியேறியவர்கள் பின்பு குடியேரியவர்கள் என இரு வகைகாளாகப் பிரிக்கலாம். விடுதலைக்குமுன்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சிறைக்கைதிகளை குடி அமர்த்தியது ஆங்கிலேய அரசு. இச்சிறைக் கைதிகளைக் கொண்டே அந்தாமான் சிறைச்சாலையினை அந்த அரசு கட்டியது.  தங்களுக்கான சிறையினை தாங்களே கட்டிக்கொண்ட கொடுமை உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை. சிறையிலிருந்து விடுதலையான கைதிகள் தங்களின் வாழ்கையினை அங்கேயே வாழத் தொடங்கிவிட்டனர். பிறகு தங்களின் குடும்பத்தாரையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றனர்.

          விடுதலைக்குப்பின் குடியேறியவர்கள்:  முன்னாள் இராணுவத்தினர், தென் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், வங்காள தேச அகதிகள், 1970 இல் இலங்கையிலிருது விருப்பத்தின் பேரில் இந்தியா திரும்பிய மலையகத் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

       அந்தமானில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழ்ந்துவருவதால் இது ஒரு குறும் பாரதமாக விளங்குகின்றது. இங்கு வாழும் தமிழர்கள் தமிழோடு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.  இவர்களின் பேசும் பேச்சுவழக்கு மும்மொழியும் கலந்த கலப்பு மொழியாக  உள்ளது. உதாரணமாக, இன்று பள்ளி விடுமுறையா ? என்பதை  இன்னைக்கு ஸ்கூல் சுட்டீயா? என்று கேட்கின்றனர். 

அந்தமான் தமிழரின் வாழ்வியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் அந்தமான்த் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  அந்தமான்த் தமிழ் கல்வியில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் இல்லை. எனவே, அந்தமானில் தமிழ் மொழி , தமிழ்க் கல்வி குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முன்னெடுக்கவேண்டும் மற்றும் தமிழக அரசு தலையிட்டு தமிழ்க் கல்வித்  தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுக் காண வேண்டும் என்ற கோரிக்கையினையும்  தமது பொழிவில் முன்வைத்தார்.

       இப்பொழிவில் 100க்கும் பேற்பட்ட நிறுவன மாணவர்கள் பங்குபெற்றனர். இப்பொழிவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்கநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மையத்தின் பொறுப்பாளரும் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கு. சிதமபரம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.