July, 2017    
உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்வு நாள் :
09.12.2014
தலைப்பு : மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்
   

09 திசம்பர்த் திங்கள் 2014 ஆம் நாள் அன்று முற்பகல் உலகத் தமிழாராச்சி நிறுவனம் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் சார்பில் மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும் என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இப்பொழிவினை எழுத்தாளர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.

    உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்காக இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் தாய்த் தமிழகத்தில் மேற்கொள்ளவும், பண்பாட்டு வேர்களைக் கண்டறியவும், அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும் வழிவகை செய்யும் விதமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தினை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் இவ்வாய்ப்பினை நல்கிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டுதலையும் நன்றியினையும் புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் சார்பில் தெரிவித்துவிட்டு தமது பொழிவினைத் தொடர்ந்தார்.

         மும்பை மாநகரத்தில் சுமார் இரண்டு இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். மும்பை மாநகரத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு  மும்பைத் தமிழ்ச் சங்கம், நவிமும்பை தமிழ்ச் சங்கம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மும்பை மாநகரத்திற்கு வேலைத்தேடி வரும் தமிழர்களுக்கென்றே பொங்கல் விடுதிகள் அங்குள்ள தமிழர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பொங்கல் விடுதியில் வேலை கிடைக்கும் வரை தங்கிக்கொள்ளலாம். உணவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தப் பொங்கல் விடுதிகளும் சாதி ரீதியாகத்தான் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன என்பது வேதனைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

        ஆனால் அங்கு உள்ள மலையாளிகள் சாதி, மதம் கடந்து மொழி ரீதியாக மலையாளிகள் என்ற பொது அடையாளத்துடன் ஒன்றிணைகின்றனர். அத்தகையதொரு ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. மலையாளிகள் அரசு பதவிகளிலும் அரசியலிலும் நல்ல நிலையில் உள்ளனர். அத்தகையதொரு வாய்ப்பு தமிழர்களுக்கு இல்லை.

           இங்குள்ள தமிழர்கள் திருமணம் தங்கள் இனத்திற்குள்ளாகவே செய்துக்கொள்கின்றனர். சுமார் 5 விழுக்காடு பெண்கள் பிற மொழிபேசும் இனத்தவரை மணந்துக்கொள்கின்றனர். 3 விழுக்காடு    ஆண்கள் பிற இனப் பெண்களை மணந்துக்கொள்கின்றனர். தமிழ் ஆண்களை மணந்துக்கொள்ளும் பிற இனத்துப் பெண்களை தங்களின் பிள்ளையைப் போன்று மாமியார்கள் பார்த்துக்கொள்கின்றார்கள். ஆனால் பிற இனத்திற்கு வாக்கப்பட்டுப் போகும் தமிழ்ப் பெண்கள் அவ்வாறு நடத்தப்படுவதில்லை.

      மும்பையின் தாரவத் பகுதியில் வசிக்கும் தமிழர்களைப் பற்றியான ஒரு படம்தான் ஸ்லம் டாக் மில்லியனர். ஆனால் தமிழர்கள் பற்றியான படம்தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளத்தையும் அப்படத்தில் காட்டப்படவில்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று என்றார்.

        மேலும் காலம்தோறும் தமிழர்களுக்கு உலக அளவில் ஏற்பட்டு வரும் இன்னல் குறித்தும்    தமது கருத்தையும் வருதத்தையும்  பொழிவாளர் அவர்கள் மாணவர்களோடு பகிர்ந்துக்கொண்டார்.

           இப்பொழிவில் 100க்கும் பேற்பட்ட நிறுவன மாணவர்கள் பங்குபெற்றனர். இப்பொழிவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மையத்தின் பொறுப்பாளரும் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கு. சிதமபரம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.