August, 2017    
ஓடிசா அரசு அதிகாரிகள் பாராட்டு
நிகழ்வு நாள் :
26.02.2015
தலைப்பு : ஓடிசா அரசு அதிகாரிகள் பாராட்டு
   

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் செயல்பாடுகளையும் நூலகத்தையும் ஆய்வுத்திட்டங்களையும் திட்டப்பணிகளையும் புத்தக வெளியீடுகளையும் ஆய்வு நெறிமுறைகளையும் கண்டறியும் நோக்கத்துடன் ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் இன்று 26.02.2015 பிற்பகல் முழுதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஆய்வுக் கூடத்தையும் நிறுவனத்தின் புதிய கட்டடத்தையும் ஓலைச்சுவடிகளையும் பார்வையிட்டனர்.

அண்மையில் ஒரிய மொழிக்குச் செம்மொழித் தகுதி ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அமைப்பில் புவனேஸ்வரில் ஒரிய மொழிக்கு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆய்வு அமைந்ததாகத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தக் குழுவில் ஒடிசா மாநிலக் கலை இலக்கியப் பண்பாட்டு நிறுவனத் தலைவரும், ஒடிசா சாகித்திய மேனாள் செயலரும், ஒடிசா மாநிலச்சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்புச் செயலரும் மற்றும் சென்னையில் பணியாற்றும் தமிழ்-ஒடிசா மொழிபெயர்ப்பில் விருது பெற்றவரும் இடம்பெற்றிருந்தனர்.

அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மனமுவந்து அளித்த அரசு நல்கைகளின் மூலம் ஏற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித்திட்டங்களை நேரில் கண்டு பாராட்டு தெரிவித்தனர். இதைப்போன்ற நிறுவனத்தைத் எங்கள் மாநிலத்தில் நாங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு தெரிவிப்போம் என்று கூறினார்கள்.  

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரும் மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் செல்வகுமாரும் நிறுவனக் கண்காணிப்பாளர் திரு.இராசாவும் நூலகர் இரா.பெருமாள் சாமியும் இக்குழுவினரிடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கட்டமைப்பையும் அதன் தோற்றம் வளர்ச்சி மற்றும் புலங்களின் செயல் பாடுகளையும் உடன் சென்று விளக்கினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உயர் ஆய்வுகளையும் அதன் வெளியீடுகளையும் நேரில் கண்டறிந்த ஒடிசா அதிகாரிகள் நிறுவனத்தைப் பாராட்டினர்.