April, 2019
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம்
நிகழ்வு நாள் :
14.03.2015
தலைப்பு : மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம்
   

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம் எனும் தலைப்பில் மலேசியத் தமிழ்ப் படைப்பளர்களுக்கும் தமிழகப் படைப்பளிகளுக்கும் இடையே  கலந்துரையாடல் நிகழ்ச்சி 14.03.2015 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

உலக அளவில் வாழ்ந்துவரும் அயலகத் தமிழர்கள் தங்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி அவ்வப்போது தமிழகம் வந்துச் செல்கின்றார்கள். அவ்வகையில் மலேசியவில் இருந்து 36 தமிழ்ப் படைப்பாளிகள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்களின் தலைமையில் வருகைத்தந்தனர். அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மாணவிகள் தமிழ் பாண்பாட்டு மரபுப்படி வரவேற்பு அளித்தனர்.

இந்த இரு நாட்டு இலக்கியப் பரிமாற்ற நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமைத் தாங்கினார். அவர் பேசுகையில்: உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர்ந்தத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்காக இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் தாய்த் தமிழகத்தில் மேற்கொள்ளவும், பண்பாட்டு வேர்களைக் கண்டறியவும், அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் எனும் உலகத் தமிழர்களின் பேரவலைக் கருத்தில் கொண்டு,  மாண்புமிகு தமிழ்நாடு மக்களின் முதலவர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  இம்மையத்திற்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வருகைப்புறிந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் ஆய்வு நூல்களை வெளியிட்டும் சிறப்பித்துள்ளனர். இன்று  தாய்த் தமிழகத்திற்கு வருகைப்புரிந்துள்ள உங்களை எங்கள் நாட்டின் தமிழ்த் தாயாக வாழுகின்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சார்பில் வருக வருக என வரவேற்கின்றேன்.மாண்புமிகு அம்மா அவர்கள் கடல்கடந்து  வாழும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்பொழுதும் முனைந்து நின்று செயலாற்றுபவர் ஆவார். ’எங்கே கெடல் தமிழர் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சிசெய்’ என்ற பாவேந்தரின் வரிக்கேற்ப உலகத் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படும்போதெல்லாம் புரட்சிக் குரல் கொடுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில்  ஒரே தலைவி மாண்புமிகு அம்மா அவர்களே என்று உலகத் தமிழர்கள் இன்று உணருகின்றனர். வாய்மையும் வாழ்க்கையும் ஒன்றே நினைத்து, தான் வாழும் வாழ்க்கை தமிழின மக்களுக்கே என வாழ்ந்துக்கொண்டிருப்பவர் மாண்புமிகு அம்மா என்பதால் தமிழ்மொழி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கன திட்டத்தால் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக்கொண்டிருக்கின்றது. எந்த தலைவரும் செய்யாத சாதனைகளை அம்மா அவர்கள் தமிழறிஞர்களுக்கு நான்காண்டுகளில் 41 விருதுகள் தந்து, இலவசப் பேருந்து பயண அட்டை கொடுத்து தமிழறிஞர்களை உயர்த்தியவர்  அம்மா அவர்கள் என்று கூறினார்.

பெ.இராசேந்திரன் அவர்கள் பேசுகையில்:  நாங்கள் ஒவ்வோரு முறையும் தமிழ்நாடு வரும்போது எங்கள் தாய்வீட்டுக்கு வருவதுபோலதான் உணருகின்றோம். தமிழ்ப் பணியில் மலேசியா இன்று சிறப்பு நிலை அடைந்து வருகின்றது. எங்கள் பணிகளுக்குத் தமிழகத்தில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்ப் பணியில் எங்களையும் இணைத்துக்கொண்டதில் தமிழக அரசுக்கும் இங்குள்ள தமிழ் அமைப்புகளுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

நமது எம்.ஜி. ஆர். நாளிதழ் ஆசிரியர் திரு. மருது அழகுராசன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் :  புலம்பெயர்ந்தத் தமிழர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும் ஆட்சி புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையில் அமைந்த இந்த ஆட்சி. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகின்றார் மாண்புமிகு தமிழ்நாடு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் வரும்போதெல்லாம் அம்மாவின் பணிகளைப் பாராட்டிச் செல்கின்றனர்.

அயலத் தமிழர்களின் வேர்கள் தாய்த் தமிழகத்திலுள்ளன; அவ் வேர்கள் உடனானத் தொடர்பு தொப்புள்கொடிப் போன்றது. ஆகையால் மலேசியாவில்  தைப்பூசமும் உண்டு, தமிழ்ப் பாசமும் உண்டு என்று பெருமைப்படக் கூறினார்.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்  அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில்  தமிழக அரசின் சார்பில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளின் பட்டியலில் அயலகத் தமிழர்களும் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் தமிழ் வளர்ர்ச்சித் துறை ஆண்டுதோறும் இளந்தமிழ் இலக்கியப் பட்டறை நடத்தி மாவட்டம்தோறும் பத்து இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளைப் பட்டைத்தீட்டி அனுப்புகின்றது. அம்மாவின் தமிழ்வளர்ச்சி பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது என்று தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர், தமிழகத் தமிழ்ப் படைப்பாளிகள், நிறுவன ஆராய்ச்சி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையும் நிறுவன கண்காணிப்பாளர் திரு .இரா. இராசா அவர்கள் நனறியுரையும் நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.